12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணிகளும் வெற்றிபெற கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான்-மும்பை அணிகளுக்கு இடையிலானப் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகாளில் 5-ல் தோல்வியடைந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் கேப்டன் ரஹானே உட்பட அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சில ரன்களை எடுத்துவிட்டு பெவிலியன் திரும்புகின்றனர்.
தொடரின் தொடக்கத்தில் சஞ்சு சாம் சன் அடித்த சதம் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு சொல்லும்படியான ஆட்டமாக தெரிகிறது. ஸ்மித், ஸ்டோக்ஸ், ரஹானே, பட்லர் என முக்கிய வீரர்களின் ஆட்டம் சொல்லும்படியாக இல்லாததால், இளம் வீரர்களும் திணறி வருகின்றனர்.
பந்துவீச்சில் ஆர்ச்சர் மட்டுமே தனி ஆளாக ராஜஸ்தான் அணி கரையைக் கடக்க போராடி வருகிறார். மும்பையின் வலிமையான பேட்டிங் வரிசையை எவ்வாறு ராஜஸ்தான் அணி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளதாக மும்பை அணியின் இயக்குனர் ஜாகீர் கான் அறிவித்துள்ளார். ரோஹித், பாண்டியா சகோதரர்கள், பீம்பாய் பொல்லார்ட், டி காக், இஷான் கிஷன் என மிகப்பெரிய பேட்டிங் வரிசையை வலிமையற்ற பந்துவீச்சுக் கூட்டணியைக் கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.
மேலும் மும்பை பந்துவீச்சாளர்கள் பும்ரா, அல்ஸாரி ஜோசப், பெஹரண்டார்ஃப், மார்கண்டே ஆகியோரை எதிர்த்து ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்க மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளதால் மும்பை அணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.