இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று வரும் இந்தத் தொடரில் இதுவரை 39 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் 17 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.இதைத்தொடர்ந்து, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதில், குவாலிஃபையர் 1, குவாலிஃபையர் 2, எலிமினேட்டர், இறுதிப் போட்டி என நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.
சென்னை அணி நடப்பு சாம்பியன் என்பதால், இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி தற்போது ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மூடப்பட்டு இருந்த ஐ,ஜே, கே என மூன்று கேலரிகளை திறப்பதற்கு சென்னை மாநகராட்சி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த மூன்று கேலரிகள் மூடப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு போட்டியின் போதும் 12 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
இதன் விளைவாகவே, இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஹைதாராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்று போட்டிகள் விவரம்:
குவாலிஃபையர் 1 - சென்னை மே 7
எலிமினேட்டர் - விசாகாபட்டினம், மே8
குவாலிஃபையர் 2 - விசாகாப்பட்டினம், மே 10
இறுதிப் போட்டி - ஹைதராபாத், மே 12