ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூரு அணியை பேட்டிங் ஆடப் பணித்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் தொடக்க வீரர் வாட்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரெய்னா ஸ்டெயினின் அபாரமான யார்க்கரால் ஸ்டெம்புகள் சிதற போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி ரன் குவிக்கத் தடுமாறியது.
இதனையடுத்து டூ ப்ளஸிஸ் - ராயுடு இணை ஜோடி நிதானமாக ரன்கள் எடுக்கத் தொடங்கியது. உமேஷ் யாதவ் வீசிய நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில் டூ ப்ளஸிஸ் 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து வந்த கேதர் ஜாதவ் 9 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி களமிறங்கினார்.
பின்னர் தோனி - ராயுடு இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை நிதானமாக ரன்களை சேர்க்க, ஆட்டம் பரபரப்பானது. பத்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனையடுத்து அதிரடி ஆட்டத்துக்கு மாறிய தோனி 11ஆவது ஓவரில் ஒரு சிக்சரை பறக்கவிட, சென்னை அணி ரசிகர்கள் மனதில் நம்பிக்கை மலர்ந்தது. இதனையடுத்து 13ஆவது ஓவரில் ராயுடு தன் பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து சாஹல் வீசிய 14ஆவது ஓவரில் ராயுடு 29 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா களமிறங்கினர். பின்னர் 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 92 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. சென்னை அணி வெற்றிபெற 30 பந்துகளில் 70 ரன்கள் தேவைப்பட்டது.
இதனையடுத்து சாஹல் வீசிய 16ஆவது ஓவரில் தோனியின் அதிரடியான சிக்சரால் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து நவ்தீப் சைனி வீசிய 17ஆவது ஓவரில், ஜடேஜா 11 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் பரபரப்பானது. இதனையடுத்து பிராவோ களமிறங்கினார். அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
இதனையடுத்து, ஸ்டெயின் வீசிய 18ஆவது ஓவரில் சிக்சரை பறக்கவிட்டு தனது ஸ்டைலில் தோனி அரைசதத்தைக் கடந்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது.
19ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மூன்றாவது பந்தில் சிக்சர் அடிக்க, அது நோ-பாலாக அம்பயர் கூறியதையடுத்து, சென்னை அணிக்கு ப்ரீ-ஹிட் கொடுக்க, அந்தப் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது. அந்த ஓவரின் கடைசிப் பந்தில் பிராவோ ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட, தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீச, முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்தில் அடித்த சிக்சர், ஸ்டேடியத்திற்கு வெளியேச் சென்றது. மூன்றாவது பந்திலும் சிக்சர் அடிக்க ஆட்டம் பரபரப்பானது.
நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்கப்பட்டது. ஐந்தாவது பந்தில் சிக்சர் அடிக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி பந்தை தவறவிட்டதையடுத்து தாகூர் ரன் அவுட்டாக பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.