ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன், ரஹானே ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்கள் எடுத்தது. இந்த சீசனின் முதல் சதத்தைப் பதிவு செய்து சஞ்சு சாம்சன் 102 ரன்களும், ரஹானே 70 ரன்களும் எடுத்தனர்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரர்கள் பெரிய இலக்கை விரட்டுவதற்கு உதவியாக வார்னர் - பேயர்ஸ்டோவ் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களுக்கு 110 ரன்கள் குவித்தனர். வார்னர் அதிரடியாக 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பேயர்ஸ்டோவ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் - விஜய் சங்கர் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை ஆட, மறுமுனையில் விஜய் சங்கர் ருத்ர தாண்டவம் ஆடினார்.
குறிப்பாக குல்கர்னி வீசிய 14-வது ஓவரில் விஜய் சங்கர் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 17 ரன்களை எடுத்தார். அதனை தொடர்ந்து 15வது ஓவரில் வில்லியம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதனையடுத்து அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே 1 ரன்னில் வெளியேறியதால் ஆட்டம் பரபரப்பாகியது. கடைசி 24 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது யூசுப் பதான் - ரஷீத் கான் களத்தில் இருந்தனர்.
17-வது ஓவரில் ஹைதராபாத் அணி 10 ரன்களை எடுக்க, தொடர்ந்து 18-வது ஓவரில் 8 ரன்களை எடுத்தது. 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. 19-வது ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ரஷீத் ஹைதராபாத் அணியை வெற்றிபெற செய்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யூசுப் பதான் 16 ரன்களும், ரஷீத் கான் 15 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.