கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட கொல்கத்தா அணிக்கு சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடும் நெருக்கடியைத் தந்தார். இவரது துல்லியமான பந்துவீச்சினால் கொல்கத்தா வீரர்களான நிதிஷ் ராணா, உத்தப்பா, கிறிஸ் லின் மற்றும் ரஸல் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இப்போட்டியில் இவர் நான்கு ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், தாஹிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 40 வயதுக்கு பிறகு ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, ஷேன் வார்னே, பிரவீன் தாம்பே, பிராட் ஹாக் ஆகியோர் இச்சாதனையை படைத்திருந்தனர்.
இதைத்தவிர, 35 வயதுக்கு பின், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார்.
35 வயதுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்:
- இம்ரான் தாஹிர் - 66
- முத்தையா முரளிதரன் - 63
- ஷேன் வார்னே - 57
- நெஹ்ரா- 46
- கும்ப்ளே- 45
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தாஹிர் ஆடிய 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை உணர்த்தியுள்ளார் இம்ரான் தாஹிர்.