சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
ரசிகர்களால் 'தல' என்றழைக்கப்படும் தோனி இப்போட்டியில், வழக்கம் போல சென்னை அணியின் இன்னிங்ஸை, சிறப்பாக ஃபினிஷ் செய்தார். மோரிஸ் வீசிய கடைசி ஓவரின் இறுதி இரண்டு பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பி ரசிகர்களை குதூகலமாக்கினார். இப்போட்டியில் 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 44 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
போட்டி முடிந்த பின் ரசிகர்கள் தன்னை செல்லமாக 'தல' என்று அழைப்பது குறித்து தோனி பேசுகையில்,
'தல' என்ற செல்லப்பெயர் எனக்கு கிடைத்தது ரொம்ப ஸ்பெஷலாக இருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய செல்லப்பெயரை அளித்துள்ளனர். அந்த பெயர் சிஎஸ்கே அணியின் பாடலில் இடம்பெறும் என்று நினைத்து பார்க்கவில்லை.
ஒட்டுமொத்த தமிழ்நாடு ரசிகர்களும் என் பெயரை சொல்லி அழைக்காமல் 'தல' என்றே அழைக்கிறார்கள். என்னை மட்டுமின்றி அவர்கள் அணியையும் எப்போதும் ஆதரித்து வருகின்றனர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தோனியின் இந்த உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்ட ரசிகர்கள், மைதானத்தில் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்து கெத்துக் காட்டினர்.