ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை அணி பேட்டிங் செய்தபோது, கடைசி ஓவரின் நான்காவது பந்து ஃபுல் - டாஸாக அமைய அது, மெயின் அம்பயரால் நோ-பால் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வீசிய பந்து, நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை தாண்டினால் லெக் அம்பயர்தான் நோ-பால் என அறிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. இருப்பினும் லெக்-அம்பயர் கூறாமல் மெயின் அம்பயர் நோ-பால் என தெரிவித்ததால் போட்டியின் நடுவே குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் அது நோ-பால் அல்ல என கள நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது, சென்னை அணி கேப்டன் தோனி களம் புகுந்தார். நேரடியாக அம்பயர்களிடம் சென்று நோ-பால் கொடுக்கப்பட்டது குறித்து வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டார்.
ஆனால், ஐபிஎல் விதிமுறைகளின்படி, பேட்டிங் செய்யும் அணியின் கேப்டன் போட்டியின் நடுவே களத்திற்கு செல்லக்கூடாது. எனவே விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், சென்னை அணி கேப்டன் தோனிக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.