ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எளிதாக வீழ்த்தி தனது வெற்றி நடையை தொடங்கியது.
இந்தத் தொடரில் பல்வேறு சாதனைகளும், சர்ச்சைகளும் நிகழ்ந்தன. பின்னர் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம், நூழிலையில் வெற்றியை பறிகொடுத்த சென்னை அணி மீண்டும் கோப்பையை தக்க வைக்க தவறியது. ஆனால் அந்த அணி கோப்பையை தக்க வைக்க தவறினாலும், ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள தவறவில்லை என்பதை நாம் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பார்த்துதான் வருகிறோம்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி 2019 ஐபிஎல் சீசனில் ட்விட்டர் சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை அணியும், மூன்றாவதாக கொல்கத்தா அணியும் இடம்பிடித்துள்ளன.
இதேபோன்று அதிகம் பேசப்பட்ட வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி இடம்பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலியும், மூன்றாவது இடத்தில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் இடம்பிடித்தனர்.
இவர்களைத் தவிர சிஎஸ்கேவின் ஹர்பஜன் சிங் நான்காவது இடமும், ஜடேஜா எட்டாவது இடமும் பிடித்தனர். இந்தத் தொடரில் அதிரடியாக அதிக சிக்ஸர்களை விளாசிய கொல்கத்தாவின் ஆண்டர் ரஸ்ஸல் 5ஆவது இடம் பிடித்தார். மேலும், மும்பை வீரர் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், தோனிதான் தனக்கு முன்மாதிரி, நண்பர், சகோதரர் என்று பதிவிட்டதே அதிமுறை ரீ ட்விட் செய்யப்பட்ட பதிவாக முதலிடம் பிடித்துள்ளது.
நடந்து முடிந்த 2019 ஐபிஎல் சீசன் குறித்து மொத்தமாக 2 மில்லியன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த சீசனைக் காட்டிலும் 44 விழுக்காடு அதிகம் என்று ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.