இன்றைய ஐபிஎல் போட்டின் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்களாக விராட் கோலி - பார்திவ் படேல் இணை களமிறங்கியது. கடந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் விளாசிய கோலி இந்தப் போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைத்த நிலையில், சாஹர் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ஆட்டமிழக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அமைதியாயினர்.
தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்க பார்திவ் படேல் - டி வில்லியர்ஸ் இணை ஜோடி சேர்ந்தது. அதிரடியாக ஆடிய இந்த இணை, தாகூர் வீசிய ஆறாவது ஓவரில் 16 ரன்களை அதிரடியாக சேர்த்தது. பெங்களூரு அணி பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 49 ரன்களை எடுத்து விளையாடி வந்தது.
இதற்கிடையே டி வில்லியர்ஸ் அடித்த ஒரு பந்தை அபாரமாக கேட்ச் பிடிக்க முயன்று டூ ப்ளஸிஸ் தவறவிட்டார். இதனையடுத்து, ஜடேஜா வீசிய ஏழாவது ஓவரில் சிக்சர் அடிக்க முயன்ற டி வில்லியர்ஸ், பவுண்டரி லைனில் டூ ப்ளஸிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து இளம் வீரர் அக்ஷ்தீப் நாத் களமிறங்கினார்.
ஒருமுனையில் அக்ஷ்தீப் நாத் நிதான ரன் குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் பார்திவ் படேல் அதிரடியாக ஆடினார். 12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 95 ரன்கள் எடுத்து விளையாடிவந்தது. அதன்பின் அக்ஷ்தீப் நாத் 24 ரன்களில் ஆட்டமிழக்க, ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ் - பார்திவ் படேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிரடியாக ஆடிய பார்திவ் படேல் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பார்திவ் படேல் 53 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஸ்டோனிஸ் - மொயின் அலி இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை அதிரடியாக ஆட முயன்றபோது, ஸ்டோனிஸ் அடித்த பந்தை, பவுண்டரி லைனில் அற்புதமாக கேட்ச் பிடித்த ஷோரே, காண்போரை பிரமிக்கவைத்தார்.
இதனைத் தொடர்ந்து பவன் நெகி - மொயின் அலி இணை களத்தில் இருந்தது. இந்த இணை அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. தொடர்ந்து 19ஆவது ஓவரில் 9 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசிப் பந்தில் நெகி 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 150 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த மொயின் அலி, அடுத்த பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பாக ஜடேஜா, சாஹர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.