எவ்வளவோ கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு அணிக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் அதன் பெயர்தான் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'. ஒட்டுமொத்த சீசன் வரலாற்றில் சென்னை அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் கடந்த சீசனில் பல மூத்த வீரர்களுடன் களம் இறங்கிய சென்னை அணியை 'டேட்ஸ் ஆர்மி' (Dads Army) என்று மற்ற அணியினரும் ரசிகர்களும் கலாய்த்தனர். ஆனால் சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 'ஆமாம்! கிரிக்கெட்டில் உனக்கு நான் டேட் (Dad) தான் என்று கெத்தாக சொல்லி கோப்பையை தட்டிச் சென்றது.
தற்போது இந்த சீசனிலும் ஐந்தில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி வீரர்களை அண்ணன், தம்பியாக தங்களது வீட்டில் ஒருவராக தமிழ்நாடு ரசிகர்கள் பார்க்கின்றனர். சென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் உண்டு. சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு 'தல' என்று அஜித்தோடு ஒப்பிட்டு ஏகப்பட்ட மீம்கள் வலம் வருவது உண்டு. சென்னை அணி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களும் விரும்பும் ஒரே கிரிக்கெட்டர் தோனி.
தோனியின் வலதுகரமாக இருக்கும் சுரேஷ் ரெய்னா 'சின்ன தல' என்று அழைக்கப்படுகிறார். இவரும் அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர். ஆல் ரவுண்டர் ஜடேஜாவை செல்லமாக 'சர்' என்று கூப்பிடுகின்றனர். தனது வித்தியாசமான சிகை அலங்காரத்தால் ரசிகர்களிடையே வெகு பிரபலம். பிராவோ சென்னை ரசிகர்களால் 'சாம்பியன்' எனப்படுகிறார். விக்கெட் எடுத்து விட்டால் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடனத்தால் நம்மிடம் கைதட்டல் வாங்குகிறார்.
கேதர் ஜாதவுக்கு ரசிகர்கள் மத்தியில் 'அதார் உதார் கேதார்' என்ற பெயர் உண்டு. சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்வதால் இந்த பேரை இவருக்கு வைத்துள்ளனர். இளம் வீரரான சாம் பில்லிங்க்ஸை 'தம்பி' என்று உறவு முறை வைத்து அழைக்கின்றனர். இம்ரான் தாஹீர் விக்கெட் எடுத்துவிட்டால் மைதானத்தையே ஒரு வலம் வந்து விடுவார் இதனால் ரசிகர்கள் 'ஓடினார் ஓடினார் மெரினா பீச்சுக்கே ஓடினார்' என்று சிவாஜியின் பராசக்தி பட வசனத்தை கூறுவர். இதனால் இம்ரான் தாஹீர் 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படுகிறார்.
சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை அணியில் இணைந்ததில் இருந்தே திருவள்ளுவர் ரேஞ்சுக்கு தமிழிலேயே குறிப்பாக சினிமா பாட்டு, வசனத்தை ட்வீட் போட்டு பொளந்துகட்டுகிறார். இதனால் இவரை 'ட்விட்டர் புலவர்' என்று புனைப்பெயரிட்டு அழைக்கின்றனர். இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதனால் ஹர்பஜன் பாட, பிராவோ ஆட, தாஹீர் ஓட என்று ரசிகர்கள் இணையத்தில் குதூகலிக்க ஆரம்பித்து விட்டனர்.