சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 152 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரரான வாட்சன் டக் அவுட், ரெய்னா 4, டு பிளசிஸ் 7, கேதர் ஜாதவ் 1 என வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், சென்னை அணி ஆறு ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே எடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இக்கட்டான தருணத்தில், ஜோடி சேர்ந்த தோனி - ராயுடு இணை சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியது. இவ்விரு வீரர்களும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 95 ரன்களை சேர்த்த நிலையில், 57 ரன்களை எடுத்து செட் பேட்ஸ்மேனாக இருந்த ராயுடு ஆட்டமிழந்தார்.
இதனால், சென்னை அணியின் வெற்றிக்கு 14 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 19ஆவது ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் தடுமாறி 8 ரன்களை மட்டுமே சேர்த்த தோனி கடைசி பந்தில் பவுண்டரியை விளாசினார். இதன் மூலம் இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 22ஆவது அரைசதம் விளாசினார்.
இதையடுத்து, இறுதி ஓவரில் 18 ரன்களை தேவைப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தை ஜடேஜா சிக்சர் விளாசினார். இதையடுத்து, அடுத்த பந்தில் ஜடேஜா சிங்கில் அடிக்க அந்த நோபால் ஆனது. இதன் மூலம் ப்ரீ ஹிட் ஆக கிடைத்த பந்தை தோனி இரண்டு ரன்களை மட்டுமே அடித்தார். இதையடுத்து அடுத்த பந்தில் தோனி ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் சான்ட்னர் இரண்டு ரன்களை அடிக்க, கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 4 ரன்களை தேவைப்பட்ட போது, பென் ஸ்டோக்ஸ் ஒயிட் பந்தை வீசினார். இதைத்தொடர்ந்து, கடைசி பந்தில் மூன்று ரன்களை என்ற நிலையில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் மிட்சல் சான்ட்னர் லாங் ஆன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டு, சென்னை அணிக்கு நைல் பைட்டிங் ஃபினிஷ் பெற்றுத் தந்தார். 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.