ஐபிஎல் 12ஆவது சீசனுக்கான தொடரின் நேற்றையப் போட்டியில், டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, 20ஆவது ஓவரின் கடைசி பந்தை வீசியபின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் மும்பை ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கவலையடைந்தனர்.
ஏனென்றால் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வெல்வதற்கான துருப்புச்சீட்டு பும்ராதான். பேட்மேன்களுக்கு இறுதி ஓவரில் மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் பும்ரா. எனவே இந்த காயத்தால் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு தடை ஏற்பட்டுவிடுமோ என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், பேட்டிங்கின்போது கடைசி விக்கெட்டுக்கு பும்ரா களமிறங்காததால் காயம் குணமடையவில்லை என்பது தெளிவாகியது.
இதனையடுத்து, மும்பை அணி நிர்வாகம் சார்பில், பும்ரா மிக முக்கியமான வீரர் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக களமிறக்கவில்லை. சாதாரணமான காயம்தான். வேகமாக குணமடைந்து அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவார் என நம்பிக்கைதெரிவித்துள்ளது.
அணி நிர்வாகம் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும், அடுத்தப் போட்டியில் களமிறங்கினால்தான் காயம் குணமடைந்தது குறித்து தெளிவான பார்வை கிடைக்கும் என்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.