டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தடுப்பாட்டத்தின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவருமான ராகுல் டிராவிட் அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் பதவி காலியானது. இந்த இடத்துக்கு விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக விவிஎஸ் லட்சுமணனும் மௌனம் காத்துவந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.14) தேசிய கிரிக்கெட் அகடமி தலைவராக விவிஎஸ் லட்சுமணன் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
இந்தத் தகவலை பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டும், விவிஎஸ் லட்சுமணனும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி இருவரும் மைதானத்துக்கு வெளியேயும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ராகுல் டிராவிட் வகித்த பதவிக்கு விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். விவிஎஸ் லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகடமி மட்டுமின்றி 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி மற்றும் இந்திய ஏ அணிக்கும் பயிற்சி அளிப்பார்.
அண்மையில் ராகுல் டிராவிட் பயிற்சி அளித்த இந்திய இளையோர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்று அசத்தியது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : Khel Ratna Award: தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருது