சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை,வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால், இறுதிப்போட்டி ஆறாவது நாளான (ரிசர்வ் டே) இன்றும் (ஜுன் 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்று சவுத்தாம்படனில் வெயில் அதிகம் இருக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழை குறித்த பயமில்லாமல் ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் வாய்ப்பு
இறுதிப்போட்டியின் ஆறாவது நாளான (ரிசார்வ் டே) இன்றைய ஆட்டம் குறித்து, இந்திய அணியின் மூத்த வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறுகையில்,'இந்தியா இன்று அதிரடியாக பேட்டிங் செய்து, ஸ்கோரை உயர்த்த முயற்சிக்கும். ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில் நியூசிலாந்தை விரைவாக ஆட்டமிழக்க வைக்க முயற்சிக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல.
கோப்பையை வெல்லவதற்கான பெரும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. தற்போது மைதானத்தில் வெயில் அடிக்கும் காரணத்தால் பேட்டிங் செய்ய எளிதாக இருக்கும். நான்காவது இன்னிங்ஸில் இந்தியா அசாதாரணமாக பந்துவீசினால் மட்டுமே நியூசிலாந்தின் அனைத்து விக்கெட்டையும் கைப்பற்றி கோப்பையை வெல்ல முடியும்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: WTC FINAL: இந்தியா மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் - சச்சின்