அன்டிகுவா: 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பை மேற்கு இந்திய தீவுகளில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் தொடக்கத்திலேயே, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
பின் வந்த வீரரான ஜேம்ஸ் ரீவ் தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்து அவுட்டாகினர். இறுதியாக இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களுக்குள், 189 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பட்டாசை வெடித்த பவா
இதன் தொடர்ச்சியாக 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்களில் ஷேக் ரஷீத் மற்றும் நிஷாந்த் ஆகியோர் 50 ரன்கள் (அரை சதம்) விளாசினர்.
முன்னதாக இறங்கிய கேப்டன் யாஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ராஜ் பாவா 35 ரன்களும், தினேஷ் 13 ரன்களும் எடுத்தார். இறுதியாக, இந்திய அணி 47.4 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களைக் குவித்து வெற்றிக் கோப்பையை தனதாக்கியது.
மேலும், இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை அளித்த ராஜ் பவா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிக முறை சாம்பியன்
ஜூனியர் ஏபிடி என அனைவராலும் பாரட்டப்பட்ட டெவால்ட் ப்ரீவிஸ், தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். அவர் இத்தொடரில் மொத்தம் 506 ரன்களை குவித்து, 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய ஜூனியர் அணி ஏற்கனவே 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளிலும் உலகக் கோப்பையை வென்றிருந்த நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையைும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: U19 Worldcup 2022 India Win: இந்தியா 5வது முறையாக வெற்றி பெற்று சாதனை