இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலிய டி20 கேப்டன் மேத்யூ வேட், "நாங்கள் நேற்று சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆனால் கடைசி ஓவரில் பாண்டியா இரண்டு சிக்சர்களை விளாசி எங்களது வெற்றியை பறித்துவிட்டார். மேலும் நாங்கள் இந்தியா போன்ற ஒரு வலிமையான அணியிடம் தோல்வியடைந்தது பெரிய விஷயமல்ல" என்று தெரிவித்தார்.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக நீங்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த வேட், "எங்கள் அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் உள்ளனர். அதில் ஸ்மித், ஹென்ட்ரிக்ஸ், மேக்ஸ்வெல் போன்றவர்கள் பிக் பேஷ் லீக் தொடரில் அணிகளை வழிநடத்தி சென்றுள்ளனர்.
மேலும் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டால், அவரது தலைமையில் கீழான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படும். இருப்பினும் நேற்றைய போட்டியில் நான் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், நான் அணியிலுள்ளவர்களின் ஆலோசனைபடியே நடந்தேன்.
ஏனெனில் நான் இதுவரை அணியை வழிநடத்தியது கிடையாது. ஆரோன் ஃபின்ச் கேப்டனாக இருக்கும் போதும், அவர் எங்களிடத்தில் ஆலோசனைகளை கேட்பார். அதுபோல்தான் நானும் ஸ்மித் மற்றும் அணியின் அனுபவ வீரர்களின் ஆலோசனைபடி நடந்துகொண்டேன்.
ஆனாலும் ஸ்மித்திற்கு மீண்டும் கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டால் அவர் சிறப்பாக அதனை செய்வார். ஏனெனில் அவரது தலையிலான ஆஸ்திரேலிய அணி பல சாதனைகளை படைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியின் இடத்தை பிடித்த வில்லியம்சன்!