ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடிவருகிகிறது. இதில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கண்டது. இதையடுத்து மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட், சிட்னியில் ஜனவரி 7ஆம் தேதியும், 4ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15ஆம் தேதியும் தொடங்குகின்றன. முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு, 2ஆவது டெஸ்டின்போது காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு வீரர் நடராஜன், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 3ஆவது டெஸ்டில் சைனி அல்லது நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நடராஜன், “வெள்ளைச் சீருடையை அணிவது பெருமிதமான தருணம். அடுத்தக்கட்ட சவால்களுக்குத் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க...'தைப்பூசம்' திருவிழாவுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு