மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 325 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் மயங்க் அகர்வால் 150 ரன்னும், அக்ஸர் பட்டேல் 52 ரன்னும், சுப்மன் கில் 44 ரன்களும் எடுத்தனர்.
62 ரன்னுக்குள் சுருண்ட நியூசிலாந்து
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 62 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கெட்டும், முகம்மது சிராஜ் 3 விக்கெட்டும், அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 70 ஓவர்களில் 276 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் (62), சித்தேஸ்வர் புஜாரா (47), சுப்மன் கில் (47), விராத் கோலி (36), அக்ஸர் பட்டேல் (41) ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது.
அஸ்வின் மாயாஜாலம்
தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம், வில் யங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் டாம் லாதம் 6 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதிரடி ஆட்டம் காட்டிய வில் யங் 41 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
மிட்செல் அதிரடி அரைசதம்
தொடர்ந்து மிட்செல் மட்டும் ஒரளவுக்கு நின்று தாக்குபிடித்து ஆடுகிறார். அவருக்கு பின்வந்த ரோஸ் டெய்லர் 6 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தின் இடைவேளையில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
மிட்செல் (29), நிக்கோலஸ் (5) ரன்னில் களத்தில் நின்றனர். தொடர்ந்து அதிரடி ஆட்டம் காட்டிய மிட்செல் 92 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 60 ரன்கள் குவித்து அக்ஸர் பட்டேல் ஒவரில், ஜெயந்த் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
3ஆம் நாள் ஆட்டம் நிறைவு
அடுத்து வந்த டாம் பிளண்ட்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி நடையை கட்டினார். இந்நிலையில் நியூசிலாந்து 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள்கள் ஆட்டம் பாக்கியுள்ள நிலையில், அவர்களின் வெற்றிக்கு 400 ரன்கள் தேவை. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன.
நிக்கோலஸ் (36), ரவீந்திரா (2) ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், அக்ஸர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க : சதம் அடித்த ஸ்ரேயாஷ் ஐயர்.. டிரா செய்த நியூசிலாந்து!