சென்னை: உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ‘உலகக் கோப்பை கிரிக்கெட் 2023’ நாளை தொடங்குகிறது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முழுவதும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெறவுள்ளது.
இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர்ந்து 14ஆம் தேதி நியூஸிலாந்து – வங்கதேசம், 18ஆம் தேதி நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான், 23ஆம் தேதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், 27ஆம் தேதி பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்கள் முதல் போட்டியில் 8ஆம் தேதி சென்னையில் விளையாட உள்ள நிலையில், மும்பையில் இருந்து, விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவிச்சந்திர அஷ்வின், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களும் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வருகை புரிந்தனர்.
இதே போல், கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித், ஆலேக்ஸ் கேரி, ஜோஸ் இங்கிலிஸ், சீன் அப்போட், ஆஸ்டோன் அகர், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் வருகை புரிந்தனர். இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி வரும் ஞாயிறன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: World Cup Cricket 2023: நாக் அவுட் சுற்றில் தடுமாற்றம்.. அவசரமா? பதற்றமா?! தொடரும் சஞ்சு சாம்சன் சர்ச்சை! - சடகோபன் ரமேஷ் கூறுவது என்ன?