டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பின்னர், உள்ளூரில் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாட உள்ளது.
வரும் பிப்ரவரி 6ஆம் தேதி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியினர் கடந்த ஜன. 31ஆம் தேதி அகமதாபாத் வந்தடைந்தனர்.
1000ஆவது போட்டி
மூன்று நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்னர், வீரர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவாண், ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்திய அணி நிர்வாகப் பணியாளர்களில் இரண்டு அல்லது நான்கு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணியினருக்கு எதிரான இந்த முதல் ஒருநாள் போட்டி என்பது இந்திய அணியின் 1000ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். எனவே, இப்போட்டிக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஸ்ரேயஸ், தவாண் போன்ற முக்கிய வீரர்கள், மாற்றுத் தொடக்க வீரரான ருதுராஜ் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அணிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக் கானுக்கு வாய்ப்பிருக்கா?
இவர்கள் ஒரு வாரக்காலம் தனிமையில் இருந்த பின்னர், இரண்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளில் கரோனா தொற்று (Negative) இல்லை என உறுதியான பிறகே அணிக்குத் திரும்ப முடியும். எனினும், காத்திருப்பு வீரர்களாக இருக்கும் ஷாருக் கான், சாய் கிஷார், ரிஷி தவாண் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி20 அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனராக இருக்கும் வெங்கடேஷ் ஐயர் ஒருநாள் போட்டியிலும், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் களமிறக்கபடாலம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஐசிசி டி20 தரவரிசை: 4ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்