டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டிரினிடாடிலில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினியில் தொடங்கியது. இது இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 100வது டெஸ்ட் போட்டியாகும். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து, இந்திய அணி இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த, மறுபுறம் ரோகித் ஷர்மா நிதானமாக விளையாடினார். இந்திய அணி 139 ரன்கள் எடுத்த நிலையில் இந்த கூட்டணி பிரிந்தது. ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் மீண்டும் சோபிக்காமல் 10 ரன்களில் அவுட் ஆனார். பின்பு, ரஹானே 8 ரன்களிலும், ரோகித் சர்மா 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 80 ரன்களுக்கு வெளியேற விராட் கோலி - ஜடேஜா சேர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்கள் குவித்தனர்.
இதையும் படிங்க: IND VS WI : ரோகித், ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசல்... இந்தியா நிதான ஆட்டம்!
இதன் அடிப்படையில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. விராட் கோலி 8 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், ஜடேஜா 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கெமர் ரோச், ஷானன் கேப்ரியல், ஜோமல் வாரிக்கன், ஜேசன் ஹோல்டர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
விராட் கோலி இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டியை விளையாடுகிறார். இவர் டெஸ்ட்டில் 111 போட்டிகளில் 8,642 ரன்களும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 274 போட்டிகளில் 12,898 ரன்களும், டி20-இன் 115 போட்டிகளில் 4,008 ரன்களுடன் மெத்தம் 25,548 ரன்கள் சேர்த்து உலக அளவில் 5வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஷானன் கேப்ரியல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 126 நோ பால் வீசி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் முகேஷ் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ashes Test: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் சேர்ப்பு - ஜாக் கிராலி சதம்!