புளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்து உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முறையே முதல் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்த மூன்று மற்றும் நான்காவது ஆட்டங்களில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பெரிய அளவில் சோபிக்காத இருவரும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். மறுபுறம் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்த நிலையில், ஒருபுறம் சூர்யகுமார் யாதவ் மற்றும் தனித்து நின்று இந்திய அணியின் ரன் கணக்கை உயர்த்தினார்.
அவருக்கு திலக் வர்மா (27 ரன்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா (14 ரன்) உறுதுணையாக இருந்தனர். அரை சதம் கடந்து விளையாடிக் கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ், 61 ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. முகேஷ் குமார் 4 ரன்களுடன் களத்தில் நின்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோமேனியா ஷெப்பர்ட் 4 விக்கெட்களும், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 166 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.