போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளை விளையாட இந்தியா அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டிரினிடாட் தீவுகளின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நேற்று (ஜூலை 24) நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மே.இ. தீவுகள் அணியில் குடகேஷ் மோட்டிக்கு பதிலாக ஹைடன் வால்ஷ் ஜூனியருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாடினார். ஆவேஷ் கானின் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷாய் ஹோப் 115 ரன்களையும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 ரன்களையும் குவித்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், தீபக் ஹூடா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, விளையாடிய இந்திய அணிக்கு கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கடைசி ஓவரை எடுத்துசென்றது. கையில் மையர்ஸ் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்திய கேப்டன் தவான் 13 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 9 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், சுப்மன் கில் 43, ஷ்ரேயஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54, தீபக் ஹூடா 33, அக்சர் படேல் 64 என மிடில் ஆர்டரில் பேட்டர்களின் சிறப்பான பங்களிப்பினால் இந்திய அணி இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றியது.
பந்துவீச்சில் 1 விக்கெட்டை கைப்பற்றி, ஆட்டத்தை கடைசி வரை எடுத்துசென்று ஃபினிஷ் செய்த அக்சர் படேல் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். இரு அணிக்களுக்கம் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 27) போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: Video: தொடை காயத்தால் தங்கத்தை தவறவிட்டேன் - நீரஜ் சோப்ரா விளக்கம்