கொல்கத்தா: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
தொடர்ந்து அசாம் மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஜன.12) இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, அபாரமாக விளையாடியதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய இலங்கை கேப்டன் சனகா முடிவெடுத்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தவறு என இலங்கை அணி கேப்டன் இன்று வருந்தியிருக்கக் கூடும். ஆரம்பத்தில் இலங்கை வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருந்தும் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இலங்கை வீரர்கள் திணறியது கண்கூட பார்க்க முடிந்தது.
சீரான இடைவெளியில் இலங்கை அணியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தன. தொடக்க வீரர் நுவைந்து பெர்னான்டோ அரை சதமும், விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் 34 ரன்களும் அடித்து அணிக்கு பக்கபலமாக இருந்தனர். மறுபுறம் மற்ற வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த கேப்டன் தசுன் சனகா, இந்த முறை 2 ரன்களில் அவுட்டாகி இலங்கை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தார். 39. 4 ஓவர்களில் இலங்கை அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதிக் கட்டத்தில் இலங்கை அணியின், துனித் வெல்லலகே மட்டும் 32 ரன்கள் திரட்டி அணி, 200 ரன்களைக் கடக்க உதவினார்.
இந்திய அணியில் பந்துவீச்சாளரக்ள் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அள்ளினர். 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் களமிறங்கினர். எளிய இலக்காக கருதப்பட்டாலும் இந்திய வீரர்களுக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் குடைச்சல் கொடுத்தனர்.
கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்கள், சுப்மான் கில் 21 ரன்கள் அவுட்டான நிலையில், கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து, அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார். இதனிடையே களமிறங்கிய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், பொறுப்பை உணர்ந்து ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.
43.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 6 பவுண்டரி அடித்து, 64 ரன்களுடன் இறுதி வரை களத்தில் நின்றார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 15ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா என்பதைப் பொறுத்து இருந்து காண முடியும்.
இதையும் படிங்க: "எனது கேப்டன்சியில் மாற்றத்தை கொண்டு வந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா" - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி...