தர்மசாலா: 13-வது உலகக் கோப்பை கடந்த 5-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முன்னதாக மழை காரணமாக டாஸ் போட தாமதமானது. டாஸ் போடப்பட்ட பின்னரும் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் துவங்க தாமதம் ஆனது. இதனால் ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதனையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினர். 6 ஓவர்களுக்கு 22 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. விக்ரம்ஜித் சிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் மேக்ஸ் ஓ'டவுட் 18, கொலின் அக்கர்மேன் 13, பாஸ் டி லீடே 2, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 19, தேஜா நிடமானுரு 20 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் களம் கண்ட அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் சிறப்பாக விளையாடி 78 ரன்களை குவித்தார். இதனால் 43 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 245 ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து போகிற போக்கில் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட துவங்கியது.
கேப்டன் பவுமா, டி காக் இருவரும் பவுண்டரி சிக்ஸர்களாக ஆட்டத்தை துவக்கினர். தென் ஆப்ரிக்கா 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி காக் 20 ரன்களில் அக்கர்மேன் பந்தில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே பவுமா வாண்டர் மேர்வி பந்தில் 16 ரன்களில் போல்டானார். பார்மில் உள்ள அதிரடி வீரர் மார்க்ரம் 1 ரன்னில் அவுட்டாக தென் ஆப்ரிக்கா அணி ஆட்டம் கண்டது.
வான்டர் டூசன் அணியை மீட்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 4 ரன்னில் அவுட்டாக தென் ஆப்ரிக்க அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. பின்னர் களமிறங்கிய க்லாசன், மில்லர் ஜோடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 5வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில், க்ளாசன் 28 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ஜான்சென் 9 ரன்னில் மீக்ரேன் பந்தில் போல்டானார். தென் ஆப்ரிக்க அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த மில்லர் 43 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கோயட்சி சற்று நேரம் தாக்குபிடித்து 22 ரன்கள் எடுத்தார். அடுத்து கலமிறங்கிய ரபாடா 9 ரன்னில் அவுட்டானார். கடைசி விக்கெட்டுக்கு மகாராஜ் சிறிது நேரம் அதிரடி காட்டினார். இறுதியாக நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதையும் படிங்க: LA28 Olympics: 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு.. நீடா அம்பானி மகிழ்ச்சி!