அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெறுவதை முன்னிட்டு குஜராத் அகமதாபாத் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 13) நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டின் ஹை லோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அகமதாபாத் நகரில் திரண்டு உள்ளதால் அந்த இடமே திருவிழா திடல் போல் காட்சி அளிக்கிறது.
நரேந்திர மோடி மைதானம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரசிகர்களை கையாளும் தன்மை கொண்டது. இந்த ஆட்டத்தில் அலை கடல் என திரண்டு வரும் ரசிகர்களை கட்டுப்படுத்த 11 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 150 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மைதானத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து ஏதுவாக போக்குவரத்து விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டிக்கு முன்னதாக பல்வேறு கலை நிகழ்வுகளை நடந்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. பிரபல பின்னணி பாடகர்கள் சங்கர் மஹாதேவன், அர்ஜித் சிங் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளன. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா இதுவரை தோற்றதே கிடையாது.
அந்த சாதனையை இந்த ஆட்டத்திலும் இந்தியா தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தியா அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் நல்ல நிலையில் உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ள தொடக்க வீரர் சுப்மான் கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் சுப்மான் கில் சென்னையில் இருந்து நேற்று (அக். 12) அகமதபாத் விரைந்தார். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
அதேபோல் பாகிஸ்தான் அணியும் நல்ல பார்மில் உள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க : New Zealand Vs Bangladesh : டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!