லக்னோ: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதிக் கொண்டன.
லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே தடுமாறிய இந்த ஜோடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
விக்ரம்ஜித் 4 ரன்களுடனும், மேக்ஸ் ஓ'டவுட் 16 ரன்களுடனும் வெளியேறினர். அதன்பின் வந்த கொலின் அக்கர்மேன் 29 ரன், பாஸ் டி லீடே 6 ரன், தேஜா நிடமானுரு 9 ரன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்கள் என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறிய நெதர்லாந்து அணி 150 ரன்களையாவது தாண்டுமா என எண்ணிய வேளையில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் - லோகன் வான் பீக் ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்து அணியை 250 ரன்கள் கடக்க உதவினர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் முடிவில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதனைத் தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இலங்கை அணி.
தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. குசல் பெரேரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் வந்த குசல் மெண்டிசும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மெண்டிஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சமரவிக்ரம - பதும் நிஸ்ஸங்கா கூட்டணி கைக்கோர்த்தது. இவர்கள் நிதானமான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக நிஸ்ஸங்கா, ஸ்காட் எட்வர்ட்ஸிடம் கேட்ச் கொடுத்து 52 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வந்த அசலங்கா 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இலங்கை அணி 48.2 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. சமரவிக்ரம 91 ரன்களுடனும், துஷான் ஹேமந்த 4 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆர்யன் தத் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையும் படிங்க: World Cup 2023: பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த வார்னர் - மார்ஸ் ஜோடி!