புனே : வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் வீரியம் குறித்து அறிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஸ்கேன் செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தின் 9வது ஓவரை ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார்.
முதல் 3 பந்துகளை அவர் வீசிய நிலையில், திடீரென வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் தவித்த அவர், அப்படிய மைதானத்தில் அமர்ந்தார். இதையடுத்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பரிசோதனை நடத்தினார். காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதாக உணர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹர்திக் பாண்ட்யாவை மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார்.
இதையடுத்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக 9வது ஓவரின் மீதமுள்ள மூன்று பந்துகளை விராட் கோலி வீசினார். இதில் அவர் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டயாவுக்கு பதிலாக இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதலில் காயத்தின் வீரியத் தன்மை குறித்து ஆராய்ந்த பிறகே ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடுவாரா என்று பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னர் அணியில் அவர் இடம் பெறுவது குறித்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
திடீர் காயத்தால் ஹர்த்திக் பாண்ட்யா விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது. அவருக்கு பதிலாக அணியில் யாரைவ் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஹர்த்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப ஒரு ஆல் ரவ்ண்டர் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ரேசில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம் பெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Shakib Al Hasan : வங்கதேசம் கேப்டன் விலகல்! அடுத்த ஆட்டத்திலாவது விளையாடுவாரா?