லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பெளலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களம் கண்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 592 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராலி 182 பந்துகளில் 189, பேர்ஸ்டோவ் 99, ஜோ ரூட் 84, புரூக் 61, மொயின் அலி 54, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களும் அடித்தனர். இதை அடுத்து 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க: Emerging Asia Cup 2023 Final : பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன்! 2வது முறையாக பாகிஸ்தான் ஏ சாம்பியன்!
தொடர்ந்து நேற்றைய முந்தினம் (ஜூலை 22) விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்காவது நாள் நேர முடிவில் 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லபுசன் 173 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ஸ் 31 ரன்களுடனும், கீரின் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில், 4வது போட்டியின் 5வது நாள் ஆட்டம் நேற்று நடக்க இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. மழை விடாமல் பெய்ததால் 5வது நாள் ஆட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஜாக் கிராலி ஆட்டநாயகனாக தேர்வானார். இந்த ஆட்டத்தை வென்று சமன் செய்யும் முனைப்புடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி லண்டன், ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: IND VS WI: 4வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 76/2