2008-ஆம் ஆண்டு தொடங்கிய முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் மோதின. அதில் பெங்களூர் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மெக்கல்லம் , ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து 158 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து சென்னை அணியின் லட்சுமிபதி பாலாஜி முதல் ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியில், முதல் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து வரலாறு படைத்தார். இந்த சாதனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக படைக்கப்பட்டது.
அந்த தொடரில், பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் மார்ஷ், பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். பஞ்சாப் அணி அந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். அந்த தொடரில் ஷேன் மார்ஷ் 611 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரின் முதல் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
அதேபோல் முதல் ஐபிஎல் தொடரின் பர்பிள் தொப்பியை பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் ராஜஸ்தான் அணிக்காக வென்றார். அந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் வீரர்கள் இதுவரை பங்கேற்ற ஒரே ஐபிஎல் தொடரும் அதுவே.
மேலும், முதல் ஐபிஎல் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் அணி வென்றது. அதற்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இருந்தார். அந்த தொடரில் வாட்சன் 17 விக்கெட்டுகளும், 472 ரன்களும் எடுத்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராகவும் வாட்சன் மாறியது குறிப்பிடத்தக்கது.