டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இன்று (அக். 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதன்மை இடத்தை பிடிக்க இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அதேநேரம், இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டர் வரிசை சற்று பலவீனமாக காணப்படுகிறது. சென்னையில் நடந்த தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
அந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் வரிசை ஆட்டம் கண்டது. ஆப்கானிஸ்தான் அணியில் பிரதானமாக சுழற்பந்து வீச்சு காணப்படுகிறது.
உலக தரம் வாய்ந்த ரசீத் கான், முகமது நபி உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர். அது இங்கிலாந்து வீரர்களுக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தக் கூடும். அதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆட்டங்களும் அந்த அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது.
வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளிடம் ஆப்கானிஸ்தான் அணி வீழ்ந்து ஒரு வெற்றிக்காக போராடி வருகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இங்கிலாந்து : ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ரீஸ் டாப்லி, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ்
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான் அல்குர்ஹில், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா ஹசன், நூர் அகமது.
இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!