புனே: முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு எந்த வீரரையும் குறை கூறப்போவதில்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக இயன் மோர்கன் கூறுகையில், “மிகவும் அபாயகரமான அணிக்கு எதிராக விளையாட உள்ளோம் என்பதை கவனத்தில் வைத்துதான் களமிறங்கினோம். ஏனென்றால் சிறந்த அணியான இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடினமான சவாலை சந்திக்க நேரிடும்.
சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தால் இலக்கை துரத்தி வெற்றி அடைந்திருப்போம். எங்கள் அணியில் எந்த வீரரையும் குறை கூறப்போவதில்லை. மாறாக இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
நன்றாக தொடக்கம் அமைந்தபோதிலும் இடையில் சில தவறுகளை செய்துவிட்டோம். இதனால் நல்ல பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை. அடுத்து போட்டியில் குழுவாக செயல்பட்டு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்று கூறினார்.
இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கனுக்கு பீல்டிங்கின்போது கட்டை விரல், ஆள்காட்டி விரலுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் சில ஓவர்கள் பீல்டிங் செய்யவில்லை.
இருப்பினும் பேட்டிங் செய்த அவர் 22 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரரான சாம் பில்லிங்ஸ் பவுண்டரி ஒன்றை தடுக்க முயற்சித்தபோது தோல்பட்டையில் காயமடைந்தார்.
இதையடுத்து முக்கிய வீரர்கள் காயம் குறித்து மோர்கனிடம் கேட்டபோது, "காயம் காரணமாக பேட்டிங் செய்வதில் சற்று சிரமம் இருந்தது. அடுத்து இரு நாள்களில் காயத்தின் தாக்கம் குறித்து தெரியவரும். அதன் பின்னர் முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்ற முன்னாள் கால்பந்தாட்ட வீரர் துளசிதாஸ் பலராம்