அகமதாபாத்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (மார்ச் 16) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் ரஷித் வீசிய முதல் ஒவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டி ரோஹித் அதிரடி காட்ட, மறுமுனையில் ராகுல் நிதானமாக விளையாடினார். பின், மூன்றாவது ஓவரில் ரோஹித் 12 (12) ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் தான் எதிர்கொண்ட முதல் பந்தான ஆர்ச்சரின் பவுன்சரை அசால்ட்டாக சிக்ஸ் அடித்து எதிரணியை மிரளவைத்தார்.
6 ஓவர் பவர்-பிளே முடிவில் இந்திய அணி, 45 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. இதுவே (45/1) இந்திய அணி இத்தொடரில் முதலில் பேட்டிங் செய்யும்போது பவர்-பிளேயில் எடுத்த அதிகப்பட்ச ஸ்கோராகும் (முதல் போட்டியில் 22/3, மூன்றாம் போட்டியில் 24/3).
நிதானமாக ஆடிய ராகுல் 14 (17) ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அசத்திய கோலி, இன்று 1(5) ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னும் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த சூர்யகுமார், 28 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
ஸ்கோர் சீராக அதிகரித்துவந்த நிலையில் 12.4 ஓவரில் இந்திய அணி 100-ஐ கடந்தது. அடுத்த ஓவரை வீசவந்த சாம் கரனின் முதல் பந்தை சிக்சர் அடித்து மிரட்டிய சூர்யகுமார், அடுத்த பந்தில் மாலன் கையில் கேட்ச் கொடுத்தார். மூன்றாம் நடுவர், பல ரீ-பிளேவிற்குப் பிறகும் சர்ச்சையான முறையில் அவுட் கொடுத்தார். சூர்யகுமார் குவித்த 58 ரன்களில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
சற்றுநேரம் அதிரடி காட்டிய பந்த் 30 (23), ஹர்திக் பாண்டியா 11 (8), ஸ்ரேயஸ் 37 (18) ரன்களில் அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்களில் 185/8 ரன்கள் எடுத்தது. இந்திய அணி கடைசி 4 ஓவர்களில் 57 ரன்களைக் குவித்ததென்பது குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும் - ரஷித், மார்க் வுட், ஸ்டோக்ஸ், சாம் கரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: ‘சதத்தில் சதம்’ - சாதனை நாயகன் சச்சின்!