இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அன்று அறிவித்தது. நான் இடது கை பந்துவீச்சாளராக இருப்பதால் இந்த அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன் என கலீல் அகமது இந்திய அணியின் தேர்வுக்கு முன் கூறியிருந்தார்.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் கலீல் அகமது, இந்திய அணியில் விளையாடுவது குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பை வெளியிடும்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். இடது கை பந்துவீச்சாளராக நான் இருப்பதால் எனது பெயர் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் என நினைத்தேன். ஆனால் என் பெயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பதற்காக நான் மனம் தளரவில்லை.
இந்தியாவில் இடது கை பந்துவீச்சாளர்கள் குறைவாகவே உள்ளனர். விரைவில் நான் இந்திய அணியில் இடம்பிடித்துக் காட்டுவேன். அதுமட்டுமின்றி இரண்டே வருடங்களில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக மாறுவேன். அந்த அளவிற்கு என் பந்துவீச்சுத் திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.
முன்னதாக, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கலீல் அகமதை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்ததாக இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கலீல் அகமது 8 ஒருநாள் மற்றும் 9 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.