ஒரு அணி பேட்டிங் செய்யும்போது ஒரு வலது கை பேட்ஸ்மேன், ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கில் இருந்தால் அவர்களை அவுட் செய்வது எதிரணிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் எந்தவொரு அணியும் இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் தங்கள் அணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர்.
வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பிடிப்பது எந்தளவுக்கு அவசியமோ, அந்தளவுக்கு வலது கை, இடது கை பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதும் முக்கியம்.
2019 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடர் என்றாலே, ஏராளமான ஆப்ஷன்களோடுதான் பெரும்பாலான அணிகள் களமிறங்கும். குறிப்பாக, பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இடது கை, வலது கை பந்து வீச்சாளர்கள் நிச்சயம் அணியில் இடம்பிடித்திருப்பார்கள்.
இன்று வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் பட்டியலில் மொத்தம் ஆறு பந்துவீச்சாளர்கள் (பெட் கம்மின்ஸ், நாதன் குல்டர் நைல், ரிச்சர்ட்சன் ஆகிய மூன்று வலது கை பந்துவீச்சாளர்களும்- மிட்சல் ஸ்டார்க், பெஹ்ரன்டார்ஃப் என இரண்டு இடது கை பந்து வீச்சாளர்கள்) இடம்பிடித்துள்ளனர்.
பொதுவாக, இடது கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதில், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும். எந்தப் பந்து 'இன் ஸ்விங்' ஆக வருகிறது... 'அவுட் ஸ்விங்' ஆக வருகிறது என்பதை அவ்வளவு எளிதாக அந்த பேட்ஸ்மேனால் கணிக்கவிட முடியாது.
இந்திய அணியில் இருந்த இடது கை பந்துவீச்சாளர்களின் மேஜிக்:
இந்திய அணி 2007இல் டி20 உலகக்கோப்பை, 2011இல் ஒருநாள்உலகக்கோப்பைகிரிக்கெட் தொடர்களை கைப்பற்றுவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது அணியில் இருந்த ஆர்.பி.சிங், இர்பான் பதான் போன்ற இரண்டு இடது கை பந்துவீச்சாளர்கள்தான். இடது கை பந்துவீச்சாளர்கள் என்றாலும் இவ்விரு வீரர்களிடையே பந்துவீசுவதில் வெவ்வேறு விதமான பாணி இருந்தது. அதன் பலனாக ஆர்.பி. சிங் அந்தத் தொடரில் 13 விக்கெட்டுகளை அள்ளினார்.
அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற, இர்பான் பதான் தன் பங்கிற்கு மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால், டி20 உலகக்கோப்பையை இந்தியா தன் வசமாக்கியது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு இதே மேஜிக் ஒர்க் அவுட் ஆகியது. ஆனால், ஆர்.பி.சிங், இர்பான் பதான் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் ஜாகிர் கான் என்ற ஜாம்பவான் 'தனிஒருவனாக' இந்த மேஜிக்கை நிகழ்த்திக்காட்டினார். அவருடன் நெஹ்ராவும் முக்கியப் பங்காற்றினார்.
ஜாகிர் கானின் பந்துவீச்சு திறன் குறித்து அனைவரும் அறிந்ததே. அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் 21 விக்கெட்டுகளோடு இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். அதேபோல், நெஹ்ரா அந்தத் தொடரில் மூன்றே போட்டிகள்தான் விளையாடினார். மூன்று போட்டிகளிலும் 3 விக்கெட்டுகள்தான் எடுத்திருந்தார். குறிப்பாக, அரையிறுதிப் போட்டியில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். எதிர்பாராதவிதமாக அப்போட்டியில் காயம் அடைந்ததால் இறுதிப் போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.
இதன்பின் இந்திய அணி விளையாடிய 2015 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த ஒரு இடது கை பந்துவீச்சாளரும் அணியில் இடம்பெறவில்லை. அணியில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற மூன்று வலது கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இடது கை பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையைத் தீர்த்தனர்.
ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின்போது அவர்களால், தங்களது திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதேபோல், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியில் இதே தவறுதான் நடந்தது.
இதற்கு ஒரே வழி கலீல் அகமதுதான்:
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு இடது கை பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இதற்கு இந்திய அணிக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் கலீல் அகமதுதான். இவர் இடது கை பந்துவீச்சாளர் என்ற ஒரு காரணம் போதும். இவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறுவதற்கு... இவர் இந்திய அணியில் இடம்பிடித்தால் உலகக்கோப்பைத் தொடரை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
21 வயதான கலீல் அகமது இந்திய அணிக்காக இதுவரை எட்டு ஒருநாள் கிரிக்கெட், ஒன்பது டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இறுதியாக, இவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் பெரிதாக சோபிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இவர் நான்கு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, டெல்லி அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளம் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் ஒத்துழைக்கும். அந்நாட்டின் தட்பவெப்ப நிலையும், ஆடுகளத்தின் தன்மையும் இவருக்கு கைகொடுக்கும்.
பேட்டிங் பயிற்சியில் இந்தியா பயன்பெறும்:
இந்திய அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, தோனி இவர்களெல்லாம் ஃபார்மில் உள்ளனர். அதனால், எந்தவித பந்துவீச்சு தாக்குதல்களையும் இவர்களால் எதிர்கொள்ள முடியும் என்று உறுதியாக கூறமுடியாது. 2015இல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஸ்டார்க், ஃபாக்னர், ஜான்சன் என மூன்று இடது கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சே எனலாம்.
2015 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியைக் காட்டிலும், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாகவே ஆடியது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் முகமது அமீர் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களுக்கு விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தங்களது விக்கெட்டையை பறிகொடுத்தது இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாது.
ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோலி இவர்கள்தான் பேட்டிங்கில் அதிகமான ரன்களை அடித்து வருகின்றனர். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடரிலும் இதேபோல் இவர்கள் இடது கை பந்துவீச்சாளர்களிடம் அவுட் ஆகினால், இந்திய அணியின் பேட்டிங் குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இதனால், கலீல் அகமது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டால் இந்திய அணி வீரர்களுக்கு இடது கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
இந்தியாவின் பலவீனம் எதிரணிக்கு பலம்:
மேற்கூறியதைப் போலவே, 2015 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணியில் இடது கை பந்துவீச்சாளர்கள் இல்லாததுதான் காரணம். இந்தியாவின் இத்தகைய பலவீனம், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு பலமாக அமைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.
கலீல் ஏன் தேவை?
பொதுவாக, உலகக்கோப்பை தொடர்களில் ஏதேனும் ஒரு அணியில் பெயர் தெரியாத வீரர்கள் இடம்பிடிப்பார்கள். ஒருவேளை அவர்கள் பந்துவீச்சாளராக இருந்தால் அவர்களது பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் மற்ற அணிகளுக்கு இருக்காது. இதற்கு சிறந்த உதாரணம் சாம் கரன். 2018இல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது என்று கூறுவதை விட கரனிடம் வீழ்ந்தது என்றே கூறலாம்.
அவர் எப்படிப்பட்ட பந்துவீச்சாளர் என்பதை இந்திய அணியால் தொடர் முடியும் வரை கணிக்க முடியாமல் போனது. கலீல் அகமதுவும் அதிகமான போட்டிகளில் விளையாடததால், அவரது பந்துவீச்சை எதிர்த்து எவ்வாறு ஆட வேண்டும்? என மற்ற அணிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. இதனால், இந்தியாவுக்கு இடது கை பந்துவீச்சாளரான கலீல் அகமது தேவைப்படுகிறார் என தாராளமாகக் கூறலாம்.