உலகக்கோப்பை தொடர் வரும் மே.30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி முன்னதாகவே இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாகிஸ்தான் வீரர்கள் தயாராவதற்கு ஏதுவாக இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மைதானங்களில் 10 ஆட்டங்களுக்கு மேல் ஆடவுள்ளதால், உலகக்கோப்பையில் மிகச்சிறந்த ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அஸாம் பேசுகையில், "பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு இந்தத் தொடர் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களோடு அனுபவ வீரர்களும் இணைந்துள்ளதால் மிகச்சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரில் இளம் வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனது ஆட்டம் போட்டியின் தன்மைக்கேற்ப இருக்கும். தாக்குதல் ஆட்டம் இல்லாமல் உலகின் தலைசிறந்த வீரராக முடிவெடுக்க முடியும் என்றால் அதனை கைவிடவும் தயாராக உள்ளேன். ஆனால் அது தேவைப்படும் நேரத்தில் நிச்சயம் வெளிப்படுத்துவேன்", என்று தெரிவித்தார்.