அபுதாபி : டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனையடுத்து முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா 51 ரன்களும், அசலங்கா 68 ரன்களும் குவித்தனர்.
ஹெட்மயர் அதிரடி
பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் களம் இறங்கினர். நிகோலஸ் பூரன் நிலைத்து நின்று விளையாடி 46 ரன்கள் குவித்த போதும், பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அபாரமாக விளையாடி ஹெட்மயர் 54 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.
தோல்வி - வெளியேற்றம்
எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேறியது.
இதையும் படிங்க :இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்!