உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16ரன்னில் வெளியேறினாலும், அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினர்.
அப்போது மூன்றாவதாக களமிறங்கிய அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் வழக்கம் போல், தனது பொறுப்பான ஆடடத்தை வெளிப்படுத்தினார். அவர் தவாலத் ஷாத்ரான் வீசிய 21ஆவது ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்னில் எடுத்தபோது 35 ரன்களை எட்டினார். இது உலகக்கோப்பை தொடரில் ஷகிப்பின் ஆயிரமாவது ரன்னாகும். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். சர்வதேச அளவில் 19ஆவது வீரராக சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும், தொடர்ந்து ஆடிய ஷகிப் தனது 45ஆவது சர்வதேச ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தபின், 51 ரன்னில் ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் ஆறு போட்டிகளில் ஆடியுள்ள ஷகிப் 476 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இப்போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. அந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் அதிகபட்சமாக 83 ரன்களை குவித்தார்.