இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டிகளில் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டி குறித்து இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது:
தற்போது இந்திய அணியானது பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகவுள்ளது. சமீபத்தில் கிடைத்துள்ள வெற்றிகளும் அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஆனாலும் நாம் எதிர்கொள்ளவிருக்கும் அணி (பாகிஸ்தான்) எதிர்பார்க்க முடியாத கடினமான அணி. ஆகையால் இப்போட்டியை எளிதாக இந்தியா எடுத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு நட்சத்திர வீரர் சவுரவ் கங்குலி, 'இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் என்பது கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டது. மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது சாதாரண போட்டி அன்று!' எனத் தெரிவித்தார்.
முன்னதாக 1999இல் இதே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது குறிப்பிடதக்கது.