2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளஸிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்ஃபிகுர் ரஹீமின் பொறுப்பான ஆட்டத்தால் வங்க தேசம் 330 ரன்களை குவித்தது. 330 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி காக் 23 ரன்களுக்கு வெளியேறினாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடிச் சேர்ந்த டூ ப்ளஸிஸ் மற்றும் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டூ ப்ளஸிஸ் 53 பந்துகளில் 62 ரன்களும், மார்க்ரம் 56 பந்துகளில் 45 ரன்களும் குவித்து விக்கெட்களை பறி கொடுத்தனர். இலக்கு கடினமானதால் சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. பரபரப்பான கட்டத்தில் 37 பந்துகளில் 45 ரன்கள் அடித்து டுமினி வெளியேறினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவியது.
வங்கதேசம் சார்பில் முஸ்தாபிகுர் ரஹ்மான் 10 ஓவர்கள் பந்து வீசி 67 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்களையும், மெஹதி ஹசன் 10 ஓவர்கள் பந்து வீசி 44 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைபற்றினார்கள். இதன் மூலம் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தன் உலகக்கோப்பை கனவை வங்கதேசம் தொடங்கியுள்ளது.