கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில், பல்வேறு ட்விஸ்ட்களுடன் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி டையில் முடிந்ததால், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
ஆனால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால், வேறு வழியில்லாமல் பவுண்டரிகள் 26-17 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. ஐசிசியின் இந்த விதிமுறை குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில்,"இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு ஆட்டத்தின் வெற்றியாளர் யார் தோல்வியடைந்தவர் யார் என அந்த நாளின் முடிவில் எதுவும் எங்களை (இங்கிலாந்து - நியூசிலாந்து) பிரிக்கவில்லை. இதனால் எந்த அணியும் இறுதிப் போட்டியில் தோற்கவில்லை. ஆனால், இறுதியில் ஒருவர் சாம்பியன் மகுடத்தை சூடித்தான ஆக வேண்டும். அதுதான் அங்கு நடைபெற்றது" என்றார்.
பின்னர் ஐசிசியின் விதிமுறை குறித்த கேட்கபட்ட கேள்விக்கு வில்லியம்சன், புன்னகைத்துக்கொண்டே இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, கப்திலி எறிந்த அந்த ஓவர் த்ரோ, ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றதுதான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது. இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என நம்புகிறேன் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.