இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'நாளை (ஜூன் 16) மழைக் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தடைபடக் கூடாது என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் முதல் எண்ணமாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் மனரீதியாக மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றும், ஒரு மழையால் கைவிடப்பட்டதாலும் மனரீதியாக வலிமையாக உள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணி என்ன மாதிரியான மனநிலையில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் அணியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. பாகிஸ்தான் அணியினர் அன்றைய நாளில் எந்த பலம் வாய்ந்த அணிகளையும் வீழ்த்துவர். இங்கிலாந்துக்கு அதுதான் நடந்தது. இடதுகை பந்துவீச்சாளரான ஆமிர் மிகச்சிறப்பாக வீசுகிறார். அவருக்கு வாகப் ரியாஸ், அப்ரிடி, ஹசன் அலி உள்ளிட்டோர் பங்களிக்காதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடவை ஏற்படுத்துகிறது.
அதேபோல் இந்திய அணியில் அனுபவமிக்க தோனி, கோலி உள்ளிட்டோர் இருப்பதால் நிச்சயம் இந்திய அணி வெற்றிபெறும். ஆனால் பாகிஸ்தான் அணியைக் குறைத்து மதிப்பிட்டால், இந்திய அணிக்கு பின்னடைவே. இன்றைய ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டமாக இருக்கப் போகிறது' என்று கணித்துக் கூறியுள்ளார்.