இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்த முதல் கேப்டனும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான கபில் தேவ் சமீபத்தில் அளித்த பேட்டியில்:
“சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருவது பாராட்டுக்குரியதுதான். ஐசிசியின் இந்த முயற்சி மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொடரின் வெற்றியை முடிவு செய்ய ஒரே ஒரு இறுதிப் போட்டிக்குப் பதிலாக குறைந்தது மூன்று டெஸ்ட போட்டிகளை நடத்த திட்டமிட்டுருக்கலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், “சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தைவிட லார்ட்ஸ் மைதானமே இறுதிப்வ்போட்டிக்கு சிறந்ததாக இருந்திருக்கும். குறைந்தபட்சம், ஓல்டு ட்ரஃபோர்டு மைதானம் அடுத்த தேர்வாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும், லார்ட்ஸ் மைதானத்தில் பெறும் வெற்றியுணர்ச்சியை வேறெங்கும் பெற முடியாது" என லார்ட்ஸில் தான் பெற்ற உலகக்கோப்பை வெற்றியனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய – நியூசிலாந்து அணி வீரர்களை ஒப்பிட்ட கபில் தேவ், “பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்கள் தான் முக்கியம் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்திய பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும், அவர்கள் எப்படி தங்கள் போட்டிச் சூழலை புரிந்து விளையாடுகிறார்கள் என்பதே முக்கியமானது. இந்திய பந்துவீச்சாளர்கள் கண்டிப்பாக கடந்த காலங்களில் அணிக்கு அரணாக செயல்பட்டதுபோல் இம்முறையும் கைக்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தாலும், நியூசிலாந்து வீரர்கள் எளிதாக சூழலுக்கு ஏற்றவாறு விளையாடுவதில் வல்லவர்கள்" என்றார்.
வரும் ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்து சென்றுவிட்ட நிலையில், இந்திய அணியுடனான இப்போட்டிக்கு முன், இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து விளையாடவுள்ளது.
தற்போது இந்திய அணி வீரர்கள், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் ஜுன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சுஷில்குமார் மீதான கொலை வழக்கு: உளவியல் நிபுணரின் உதவியை நாடுகிறது டெல்லி போலீஸ்!