உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா - தவான் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் ஐந்து ஓவர்களுக்கு பின் அட்டகாசம் செய்யத் தொடங்கினர்.
சிறப்பாக ஆடிய தவான், ரோஹித் என இருவரும் அரைசதம் அடிக்க, இவர்களைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறினர். பின்னர் ரோஹித் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோல்டர் நைல் பந்தில் கேரியிடம் பிடிபட்டார். பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த தவான், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிதறடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அவர் ஒருநாள் போட்டிகளில் தனது 17ஆவது சதத்தை நிறைவு செய்தார்.
பின்னர் 109 பந்துகளில் 16 பவுண்டரிகள் உட்பட 117 ரன்கள் எடுத்து தவான் ஆட்டமிந்தார். புயல் அடித்தது போல் அடுத்த வந்த இளம் வீரர் பாண்டியா 27 பந்துகளில் 48 ரன்களும் ( 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), தோனி 14 பந்துகளில் 27 ரன்களும் ( 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடைசி ஓவரில் தூக்கி அடிக்க முயன்ற கேப்டன் விராட் கோலி 82 ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 3 பந்துகளில் 11 ரன்களும், ஜாதவ் ரன் ஏதும் இன்றியும் களத்தில் இருந்தனர்.