வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆஸ்தான ஆல்-ரவுண்டரான கிறிஸ் கெயில், உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவேன் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெயில், தற்போது தனது முடிவை மாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் உள்ளூரில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பேன். இதுவே உலகக்கோப்பை தொடருக்கு பின்னான தனது திட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருடன் கெயில் ஓய்வு பெறுவார் என்று நினைத்திருந்த நிலையில், அவர் முடிவை மாற்றியுள்ளதால் உலகம் முழுவதிலும் உள்ள கெயிலின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடந்த 1999 ஆம் ஆண்டு அறிமுகமான கெயில், இதுவரை 292 ஒருநாள் போட்டிகளில் 25 சதம், 52 அரைசதம் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில் இதுவரை பங்கேற்ற ஆறு போட்டிகளில் 194 ரன்களை(அதிகபட்சமாக 87) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.