உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணியைப் பொறுத்தவரை 7 போட்டிகளில் 2 ஆட்டங்கள் மழையால் தடைப்பட்டதால் மூன்று தோல்வி, இரண்டு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த அணியில் கருணரத்னே, குசால் பெரேரா, ஃபெரனாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்டோர் சிறந்த வீரர்களாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டுமே ரன் சேர்ப்பதால் இலங்கை அணி தோல்வியடைந்து வருகிறது. அதேபோல் பந்துவீச்சில் மலிங்கா, லக்மல் ஆகியோர் மட்டுமே சிறப்பாக உள்ளனர். இங்கிலாந்து அணியிடம் விளையாடியதை போல், மீண்டும் வெளிப்படுத்தினால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மிகப்பெரிய பில்டப்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் தொடர் தொடங்கியதும் காலம் கடந்த புஷ்வனமாய் இருக்கிறது. கெய்ல், ஹோப். பூரான், ஹெட்மயர் என அதிரடிக்கு ஆள் இருந்தாலும் சிறந்த பந்துவீச்சால் எதிரணியினர் எளிதாக சமாளித்து வருகின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், காட்ரெல் மட்டுமே சிறப்பாக வீசுகிறார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் சொன்ன பிளான் பியை இந்தப் போட்டிலாவது செயல்படுத்தினால், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியாவது பெற முடியும்.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் இலங்கை தொடரைவிட்டு வெளியேறிவிடும் என்பதால் ரசிகர்களிடயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.