2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஆறாவது போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மிகப்பெரிய அடி வாங்கியது. ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுன்சர்களுக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறினர். அதேபோல் நடுவரிசையில் அனுபவ வீரர் மாலிக் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் அணியினர் என்ன பதில் கூறப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பர்த்துள்ளனர்.
பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஆமீர் தனது ஃபார்ம் குறித்த கேள்விக்கு கடந்த போட்டிலேயே பதிலடி கொடுத்துவிட்டார். வகாப் ரியாஸ், ஹசன் அலி, ஷடாப் கான் உள்ளிட்டோர் இன்றைய போட்டியில் அதிரடியான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், தற்போதைய கிரிக்கெட் உலகில் சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஒரு வீரரின் விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியடைந்தால், அடுத்ததாக களமிறங்கும் வீரர் அவரைவிட ஆக்ரோஷமாக ஆடி எதிரணியினரின் மனவலிமையை சிதைத்துவிடுகிறார்கள். இந்த பேட்டிங் வரிசையிடம் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார்கள் என்று கிரிக்கெட் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயன் மோர்கன், பெயர்ஸ்டோவ், ராய், ரூட், ஸ்டோக்ஸ், மொயின் அலி, பட்லர் என அதிரடியின் மொத்த உருவத்தையும் கொண்டு மிரட்டிவருகிறது இங்கிலாந்து அணி. பந்துவீச்சில் இளம் வீரர் ஆர்ச்சர் பட்டையைக் கிளப்புகிறார். மார்க் வுட், டாம் கரண், கிறிஸ் வோக்ஸ் என சொந்த மண்ணில் மிரட்டலுக்கு தயாராகிவருகிறது இங்கிலாந்து அணி.
உலகக்கோப்பை தொடரில் இருஅணிகளும் இதுவரை 9 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், இவ்விருஅணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி மழையால் நடைபெறவில்லை.
இன்றைய நாளில் இங்கிலாந்து அணியினரின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியினர் இங்கிலாந்து அணியை வெல்ல முடியும். இதனை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.