உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 16ஆவது லீக் போட்டி இன்று பிரிஸ்டோல் நகரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டது. நான்கு மணி நேர்ததிற்கும் மேலாக மழை பெய்துவருவதால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணி இந்தத் தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, இரண்டு போட்டி முடிவு இல்லை என நான்கு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், வங்கதேச அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை என மூன்று புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியும் மழையால் ரத்தானது. இதைத்தொடர்ந்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். முன்னதாக, இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் இதே மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியும் மழையால் ரத்தானது. தொடர் தொடங்கி இரண்டு வாரத்திற்குள் மூன்று போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால், உலகக் கோப்பை மீது உள்ள சுவாரஸ்யம் குறைந்துள்ளது. இதற்கிடையே, நாளை டவுன்டனில் நடைபெறவுள்ள 17ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.