2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் ஏழாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. சமீப காலமாக ஆப்கானிஸ்தான் மிகச்சிறந்த அணியாக வலம்வந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, ஆஃப்டாப் ஆலம் என வலிமையான பந்துவீச்சாளர்களைக் கொண்டு பலம்வாய்ந்த அணிகளையும் திணறடித்துவருகிறது. அதிலும் ரஷீத் கானின் பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் சிறப்பான பந்துவீச்சையே ஆப்கானிஸ்தான் அணி வீசியுள்ளது. அதனால் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை சேஷாத், கேப்டன் குலாப்தீன் நைப், ரஹ்மத் ஷா என சிறப்பாக விளையாடும் வீரர்கள் உள்ளனர். தொடக்க வீரர் சேஷாத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் இலங்கை அணியினரின் பாடு திண்டாட்டம்தான்.
இலங்கை அணியினரை பொறுத்தவரை கடந்த போட்டியில் கேப்டன் திமுத் கருணரத்னே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் குசால் பெரெரா, திரிமான்னே, மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரெரா என சிறந்த வீரர்கள் இருந்தும் கடந்த சில வருடங்களாக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறது.
இந்தப் போட்டியில் மலிங்கா, லக்மல், உடானா, பிரதீப் ஆகியோர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என்றால் ஆட்டத்தை முழுமையாக ஆப்கானிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தும்.
உலகக்கோப்பை தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி, இந்தப் போட்டியில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.