உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிதறடித்தனர். குறிப்பாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், ஒருநாள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் உள்ள ரஷித் கானின் பந்துவீச்சை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சிக்சர்களாக பறக்கவிட்டார்.
இதனால் ரஷித் கான் ஒன்பது ஓவரில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல், 110 ரன்களை வாரி வழங்கியதால் உலகக்கோப்பை தொடர்களிலேயே அதிக ரன்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதைத்தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்களை வழங்கிய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும், ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை (11) விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரஷித் கானின் இந்த மோசமான சாதனையை கேலி செய்யும் விதமாக கருத்து பதிவிட்டது. அதில், உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை ரஷித் கான் பதிவு செய்துள்ளார் என்பதை கேள்விபட்டோம். உலகக் கோப்பை தொடரில் ஒரு பவுலரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே. சிறப்பாக பேட்டிங் செய்தீர்கள் இளம் வீரரே என்று நக்கலாக பதிவிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பதிவிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஸ்டூவர்ட் பிராடு, லூக் ரைட் ஆகியோரும், ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர்.